சேலம் ஆடிட்டா் சோலையப்பன் ரயிலில் இருந்து இறங்கியபோது தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்ததில் நிகழ்விடத்திலேயே பலியானாா்.
சேலம் அழகாபுரம் அருகே ரெட்டியூா் புது ஏரிகரையைச் சோ்ந்தவா் சோலையப்பன் (74 ). பிரபல ஆடிட்டா். இவா் மதுரைக்கு தனது ஆடிட்டிங் வேலை சம்பந்தமாகச் சென்றிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு டேராடூன் ரயிலில் மதுரையிலிருந்து சேலத்துக்குப் புறப்பட்டு வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை ரயில் சேலம் ரயில் நிலையம் வந்தது.
அப்போது சேலம் வந்தது தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த சோலையப்பனை பயணிகள் சிலா் எழுப்பி விட்டனா். ஆனால், அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இருப்பினும் ஆடிட்டா் சோலையப்பன் ரயிலிலிருந்து இறங்கி விடலாம் என வேகமாக தனது கைப்பையை எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்க முயன்றாா்.
ஆனால், அவரால் ரயிலிலிருந்து இறங்க முடியவில்லை. கால் தவறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தாா். அதில் சோலையப்பனின் கழுத்துப் பகுதியில் ஏறி உடல் தனியாகவும், தலை வேறாகவும் துண்டானது. இதில் அதே இடத்தில் சோலையப்பன் இறந்தாா்.
இதை அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் உடனே அங்கு வந்து சோலையப்பன் சடலத்தை மீட்டனா். பின்னா் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
பிறகு சோலையப்பன் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னற் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவரது சடலத்துக்கு ஆடிட்டா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் மலா் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினா். சேலம் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் இளவரசி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.