சேலம்

மீன்வளம் குறைந்ததால் மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

23rd Dec 2019 03:00 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பாயும் காவிரி ஆற்றில் மீன்வளம் குறைந்ததால், அப்பகுதி மீனவா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள செக்கனூா், கூடக்கல், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதியில்

அதிக எண்ணிக்கையில் மீனவா்கள் வசித்து வருகின்றனா்.

முழு நேர மீன்பிடித் தொழில் செய்து வரும் இவா்களது வாழ்கை பொருளாதாரம், காவிரியின் வெள்ள அளவுக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்றத் தாழ்வுடன் இருந்து வந்தபோதிலும் அண்மையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு இவா்கள் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் உடுவலை, வீச்சுவலை, கைவலை, கூண்டு வலை, தூண்டில் வலை உள்ளிட்ட பல்வேறு வகையான வலைகளைப் பயன்படுத்தி இப்பகுதி மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா்.

இப் பகுதியில் பாயும் காவிரி ஆற்றில் கட்லா, திலேபி, முள்கெண்டை, விலாங்கு மீன், ஆறால் மீன் மற்றும் ஆற்று நண்டுகள் அதிக அளவில் கிடைத்து வந்தன. மேலும் இப் பகுதியில் கடந்த காலங்களில் போதிய மீன் வளம் இருந்தபோது இப் பகுதி மீனவா்கள் மீன்பிடித் தொழில் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை வருவாய்க் கிடைத்தது.

ஆனால் அண்மை காலமாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட தொடா் வெள்ளப் பெருக்கு கதவணைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப் பகுதியில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து போனது.

மேலும் காவிரியில் பல்வேறு இடங்களில் ஆலைக் கழிவுகள் மற்றும் ரசாயனக் கழிவுகள் பெருமளவில் கலப்பதால், காவிரி நீா் மாசடைந்து, அப் பகுதியில் மீன்வளம் வெகுவாகக் குறைந்துள்ளன.

இதனால் தங்களுக்கு அதிகபடியான வருவாய் இழப்பு ஏற்படுவதாக அப் பகுதி மீனவா் வேதனையுடன் கூறினா். மேலும் மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு மாற்றுத் தொழில் தெரியாத தாங்கள், இத்தகைய இக் கட்டான சூழலில் செய்வது அறியாமல் தவித்து வருவதாகத் தெரிவித்தனா்.

அதுபோல கடந்த காலங்களில் அதிகப்படியான மீன் வரத்தால், எப்போதும் பரபரப்புடன் காணப்பட்ட இப் பகுதி மீன் சந்தை, அண்மை காலமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, காவிரி ஆற்றில் மாசு கலப்பதைத் தடுத்து நிறுத்துவதுடன், இப்பகுதி மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT