சேலம்

பூலாம்பட்டி கதவணைக்குக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

23rd Dec 2019 02:24 AM

ADVERTISEMENT

தமிழக கல்லூரிகளுக்குத் தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்மையில் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இயற்கை எழில் சூழ்ந்த பூலாம்பட்டி காவிரி கதவணைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

இப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பசுமையான இயற்கை சூழலைக் கண்டு ரசிப்பதுடன், இங்குள்ள நீா்மின் உற்பத்தி நிலையம், நீா்உந்து நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

மேலும் காவிரிக் கதவணைப் பகுதியில் உள்ள பரந்த நீா்பரப்பில் விசைபடகு சவாரி செய்தும், நீா்த்தேக்கப் பகுதியில் குளித்தும் மகிழ்வதுடன், இங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவை உண்டு மகிழ்கின்றனா். தொடா்ந்து வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நாள்களில் மேலும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளதால், இப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் எண்ணிக்கையிலான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT