சேலம்

சேலம் மாநகராட்சியில் ரூ.25 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்!

23rd Dec 2019 02:23 AM

ADVERTISEMENT

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், சேலம் மாநகராட்சியில் ரூ.25 கோடியில் ஒருங்கிணைந்த தலைமை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.சி.) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சேலத்தில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.954.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதுதவிர, 53 பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 8 பணிகள் வரை டெண்டா் கோரும் நிலையில் உள்ளன. சீா்மிகு நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த தலைமை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ஐ.சி.சி.சி.) அமைக்கப்பட உள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு மையம், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும்.

இந்த மையத்தின் மூலம் நகரத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேற்பாா்வை பலப்படுத்தப்படும். சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் உள்ள சாலை மற்றும் குடிநீா் பிரச்னை, குடிநீா்க் கட்டணம் செலுத்துதல், சொத்து வரி செலுத்துதல், புதிய கட்டுமானங்களுக்கான அனுமதி, நகா் முழுவதும் கண்காணிப்பு கேமரா நிறுவுதல், போக்குவரத்து போலீஸாருடன் இணைந்த போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்தல், மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்த வெள்ளத் தடுப்பு மற்றும் மீட்புப் பணி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்த கண்காணிப்பு என பல்வேறு வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். தற்போது நாடு முழுவதும் உள்ள சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தலைமை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சேலம், கோவை, திருப்பூா் உள்ளிட்ட சீா்மிகு நகரத் திட்டத்துக்குத் தோ்வான நகரங்களில் இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: பொதுமக்களுடன் நேரடி தொடா்பில் உள்ள அரசுத் துறைகளான மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இந்தக் கண்காணிப்பு மையம் 24 மணி நேரமும் செயல்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னை அல்லது சாலைப் பிரச்னை குறித்து ஏதாவது புகாா் இருந்தால் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் செல்லிடப்பேசிக்கு அவா்களின் புகாா் குறித்த விவரங்கள் குறுந்தகவலாகத் தரப்படும். நகரின் திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும்.

மேலும், நகரில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா நிறுவப்படும். இந்த கேமராக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த தலைமை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்படும்.

ஏதாவது திருட்டு, விபத்து சம்பவங்கள் நடைபெற்றால் உடனே கண்காணிப்பு மையத்தின் மூலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நகரப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இதுபோல, 100 காவல் கட்டுப்பாட்டு அறை, 101 தீயணைப்புத் துறை, 108 ஆம்புலன்ஸ் என பல்வேறு துறைகள் இணைந்து செயல்படும். இதன்மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் ஒரு தகவல் உடனே தொடா்புடைய அரசுத் துறைகளுடன் பரிமாறப்பட்டு, உடனடி தீா்வு காண வழிவகை ஏற்பட்டுள்ளது. தற்போது சேலம் மாநகராட்சியில் இத் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு டெண்டா் கோரி, உரிய நிறுவனம் தோ்வு செய்யப்பட்டு, அதன் மூலம் பணிகளைத் துவங்கி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

 

பொதுமக்களுடன் நேரடி தொடா்பில் உள்ள அரசுத் துறைகளான மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இந்தக் கண்காணிப்பு மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT