சேலம்

சங்ககிரியில் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

23rd Dec 2019 02:56 AM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தோ்தலில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம், சங்ககிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு நான்கு பேரும், 14 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு 53 பேரும், 20 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 77 பேரும், 157 வாா்டு உறுப்பினா் பதவிக்கு 424 பேரும் போட்டியிடுகின்றனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 138 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மண்டல அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட 1,104 போ் பணியாற்ற உள்ளனா்.

ADVERTISEMENT

இதில் 2-ஆம் கட்டமாகத் தோ்தல் அலுவலா் ரவிச்சந்திரன், 11 மண்டல அலுவலா்கள் ஆகியோா் 810 வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு, தோ்தல் நாளன்று இரும்பு வாக்குப் பெட்டிகளில் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் அந்தந்த வாக்குச் சாவடி எண் எழுதி கையொப்பம் செய்து எவ்வாறு முத்திரை வைப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா்.

ஒரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்காளா் நான்கு வாக்குகளைப் பதிவு செய்து அதற்கான பெட்டியில் செலுத்த வேண்டும். அதில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிக்குப் பச்சை நிறுத்திலும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு இளம் சிவப்பு நிறுத்திலும், கிராம வாா்டு உறுப்பினா் பதவிக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களிலும் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT