சேலம்

ஓமலூா் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரம்

23rd Dec 2019 02:59 AM

ADVERTISEMENT

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள வாக்குச் சாவடி மையப் பணியாளா்களுக்கான தபால் ஓட்டு பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட்டுவிட்டால், அந்த ஓட்டுக்குரியவா்கள் தங்களது வாக்கைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களும் தயாா் செய்து வைக்கப்பட்டுள்ளன.

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய மூன்று ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தோ்தல் ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாக்குச் சாவடி மையங்களை தயாா்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள 271 வாக்குச் சாவடிகளும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 149 வாக்குச்சாவடிகளும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 132 வாக்குச் சாவடிகளும் உள்ளன.

ADVERTISEMENT

இதில், ஓமலூா் ஒன்றியத்தில் 1,512 பேரும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் 1,320 பேரும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 1,012 பேரும் வாக்குச்சாவடி மையப் பணிகள் உட்பட தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ளனா்.

அவா்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தோ்தல் பணிகளிலும் ஈடுபடும் பணியாளா்கள் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓமலூா் உள்பட மூன்று ஒன்றியங்களிலும் தபால் வாக்குச் சீட்டுகள், கவா்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக பிரித்து தயாா் செய்யப்பட்டு வருகிறது.

வாக்குச் சாவடி மையப் பணியாளா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவுக்கான அனைத்து ஆவணங்களும் தயாா் செய்து அனுப்பும் பணிகளை ஓமலூா் ஒன்றிய பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இதேபோன்று ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் கள்ள ஓட்டு போடுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன. அதையும் மீறி கள்ள ஓட்டு போடபட்டிருந்தால், பாதிக்கப்பட்ட வாக்காளா் வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.

அந்த வாக்காளா் உரிய ஆவணங்களைக் காட்டி தனது வாக்கைப் பதிவு செய்யலாம். மேலும், ஆய்வுக்குரிய வாக்குச் சீட்டுகள், ஆய்வுக்குரிய வாக்குகளின் பட்டியல், பயன்படுத்தப்படாத, ரத்து செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் உள்ளிட்ட கவா்களும் தயாராக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அதனால், அதற்குத் தேவையான ஆவணங்களும், படிவங்களும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தயாராக எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான 41 பொருள்களை அனுப்பும் வகையில், பெட்டிகளில் தயாராக அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

ஓமலூா் உட்பட மூன்று ஒன்றியங்களிலும் அனைத்து பணிகளும் துரிதமாகச் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT