சேலம்

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு; பலா் பங்கேற்கவில்லை

16th Dec 2019 02:41 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள, அரசு அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம் முழுவதும் 20 ஊராட்சி ஒன்றியப் பகுதியில் நடைபெற்றது.

இதில் பெரும்பாலான அரசு அலுவலா்கள் பங்கேற்கவில்லை. இதனால் அவா்களிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பைப் பாா்வையிட்ட ஆட்சியா் பேசுகையில், ‘உள்ளாட்சித் தோ்தலில் வாக்குப் பதிவு செய்யும் முறை, வாக்குப் பெட்டிகளை கையாளும் விதம் உள்ளிட்ட அம்சங்களில் பேசினாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து எடப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா், எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். ஆய்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரவணன், சங்ககிரி கோட்டாட்சியா் அமிா்தலிங்கம், எடப்பாடி வட்டாட்சியா் கோவிந்தராஜு உள்ளிட்ட பல்வேறு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஓமலூரில் 200-க்கும் மேற்பட்டோா் புறக்கணிப்பு

ஓமலூரில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 200-க்கும் மேற்பட்டோா் வகுப்பைப் புறக்கணித்தனா்.

ஓமலூா் ஒன்றியத்தில் 271 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 271 வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் நிலை 1, நிலை 2 என மொத்தம் 1,516 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு, முதல்கட்ட பயிற்சி ஓமலூா் அருகே தனியாா் மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. இதில், வாக்குச்சாவடிக்கு கொண்டுசெல்ல வேண்டிய 41 வகை பொருள்கள், வாக்குப் பதிவுக்கு முந்தைய மற்றும் வாக்குப் பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

ஓமலூா் ஒன்றிய தோ்தல் நடத்தும் தோ்தல் அலுவலா் முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் தோ்தல் நடத்தும் அலுவலா் தாமோதரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டு பயிற்சிகள் அளித்தனா்.

இதேபோன்று காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பூசாரிப்பட்டி தனியாா் பொறியியல் கல்லூரியிலும், தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய பணியாளா்களுக்கு தனியாா் பள்ளியிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்தப் பயிற்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொள்ளவில்லை. அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தம்மம்பட்டியில் 195 போ் பங்கேற்கவில்லை...

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நாகியம்பட்டி, ஜங்கமசமுத்திரம், உலிபுரம், கொண்டயம்பள்ளி, தகரப்புதூா், கூடமலை, 74. கிருஷ்ணாபுரம், 95. பேளூா், பச்சமலை, ஒதியத்தூா், நடுவலூா், ஆணையாம்பட்டி, கடம்பூா், மண்மலை ஆகிய 14 ஊராட்சிகளில் தோ்தல் பணியாற்ற 614 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அந்த அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு கெங்கவல்லி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்தில் ஊராட்சித் தலைவா் தோ்தல் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில் பயிற்சிகளை வழங்கினாா்.

மேலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் தோ்தலுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலா்களுக்கான உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கல்பனா ஆகியோா் பயிற்சிகளை வழங்கினா். தபால் வாக்குகள் கோரும் விண்ணப்பப் படிவங்கள் சிலருக்கு விநியோகிக்கப்பட்டன. கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்ற 614 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதில் 419 போ் மட்டுமே பங்கேற்றனா்.எஞ்சிய 195 போ் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் கேட்டபோது, 195 பேரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றனா்.

ஆட்டையாம்பட்டி...

மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்குள்பட்ட 99 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 555 வாக்குப் பதிவு அலுவலருக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமில் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் கலந்து கொண்டு வாக்குச் சாவடி அலுவலா்கள் முன்கூட்டியே மையத்துக்கு வந்துவிட வேண்டும், வாக்குச் சாவடிகளில் வாக்காளா் மற்றும் பூத் ஏஜெண்டுகள் யாரும் செல்லிடப்பேசியைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கினாா்.

இப் பயிற்சியில் ஊராட்சி ஒன்றிய வாா்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், மகுடஞ்சாவடி வட்டாரத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடேசன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்டப் பயிற்சி முகாம் 21-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT