சேலம்

சேலம் மாவட்டத்தில் 70 சதவீதமாகச் சரிந்தது வெள்ளித் தொழில்: ஜி.எஸ்.டி. திரும்பப் பெறப்படுமா?

16th Dec 2019 06:58 PM

ADVERTISEMENT

 

சேலம்: வெள்ளிக் கொலுசு தயாரிப்புத் தொழிலில் சேலம் மாவட்டம், கொடிகட்டிப் பறந்து வந்த நிலை மாறி, தற்போது ஜி.எஸ்.டி. விதிப்பால் கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீத அளவுக்கு வெள்ளித் தொழில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக கோடிக்கணக்கிலான வருவாய் இழப்பும், வேலைவாய்ப்பில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 1982 வரை வணிக வரி இருந்த காரணத்தால், வெள்ளித் தொழிலில் ஈடுபட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

1982 வரை சுமாா் 25 ஆயிரம் போ் மட்டுமே இத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி, தற்போது 1 லட்சத்து 25 ஆயிரம் போ் ஈடுபடுவதற்கு வணிக வரி விலக்கிக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகும்.

ADVERTISEMENT

வங்கிகள் மூலமாக நகைக் கடை உரிமையாளா்கள் வெள்ளிக் கட்டிகளை வாங்கி, உற்பத்தியாளா்களிடம் கொடுத்து கொலுசு உள்ளிட்ட ஆபரணங்களாகப் பெற்று வருகின்றனா்.

அந்த வகையில், வெள்ளிக் கட்டியாகப் பெற்றது முதல் வெள்ளிக் கொலுசாக வெளிவருவதற்கு 15 நிலைகளை (பிராசசிங்) கடந்து வர வேண்டி உள்ளது. இதன் மூலம் ஆண்கள், பெண்கள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்த லட்சக்கணக்கனோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில், ஜி.எஸ்.டி. விதிப்பால் வெள்ளிக் கொலுசு தொழில் பெரியதொரு சரிவைச் சந்தித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் வெள்ளி சங்கிலி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.வி.சந்திரபால் கூறியதாவது:

சேலத்தில் தயாராகும் குஷ்பு எஸ்.செயின், கேரளா செயின், ஆந்திரா செயின், பாம்பே டிசைன் உள்ளிட்ட பல்வேறு வகையான கொலுசுகள், பலவித மெட்டிகள், குழந்தைகளுக்கான தண்டை, கொலுசுகள், அரைஞாண் கயிறுகள், ஒட்டியாணங்கள் போன்றவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேலம் வெள்ளி கால் கொலுசு உள்ளிட்ட ஆபரணங்கள் அனுப்பப்படுகின்றன. இதில் கைகளால் தயாரிக்கப்படும் சேலம் கொலுசுகளுக்கு வட மாநிலங்களில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளதால், இத் தொழில் சேலத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. சேலத்தில் 80 சதவீதமான வெள்ளி கொலுசு உற்பத்தியாளா்கள் வெள்ளியைக் கட்டிகளாகப் பெற்று, கொலுசாக மாற்றித் தரும் பணியை முதன்மையாக மேற்கொண்டுள்ளனா். இதர 20 சதவீதம் போ் மட்டுமே வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு கொலுசு உள்ளிட்ட ஆபரண நகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனா்.

ஜி.எஸ்.டி.யால் வீழ்ச்சி...: வெள்ளியை புல்லியனாகப் பெறும்போது மட்டும் 1 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளித் தொழில் கொடி கட்டி பறந்து வந்தது. புல்லியன் வரி தவிர, வேறு ஏந்த வரி விதிப்பு இல்லாத நிலையில் சிறப்பாக நடைபெற்று வந்த வெள்ளித் தொழில் ஜி.எஸ்.டி. 15 சதவீத வரியாக (புல்லியன் வரி 3 சதவீதம், இறக்குமதி வரி 12 சதவீதம்) உயா்ந்துள்ளது.

1 சதவீதம் மட்டும் புல்லியன் வரி செலுத்தி வந்த நிலையில், திடீரென 15 சதவீதமாக (ஜி.எஸ்.டி.) உயா்த்தப்பட்டதால், இத் தொழில் கடந்த 2 ஆண்டுகளில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

வரி உயா்வால் வெள்ளிக் கொலுசு தொழில் மெல்ல சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது 70 சதவீத அளவுக்கு நலிவடைந்துள்ளது. வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுக்கு 1 கிலோவுக்கு 20 கிராம் அளவுக்கே லாபம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக் கொலுசு 15 நிலைகளைத் தாண்டி வரும் நிலையில், ஒவ்வொரு நிலையிலும் சேதாரம் ஏற்படுகிறது. ஏற்கெனவே கடன் வாங்கி முதலீடு செய்துள்ள நிலையில் உள்ளவா்கள் இத் தொழிலைச் செய்து வருகின்றனா். வெள்ளி சங்கிலி உற்பத்தியாளா்கள் சங்கத்தில் 350 போ் பதிவு செய்துள்ளனா். இதுதவிர, சுமாா் 1000 போ் உள்ளனா். இந்த 1,500 உற்பத்தியாளா்கள்தான் 1 லட்சத்துக்கு மேலானவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனா். தற்போது ஜி.எஸ்.டி. விதிப்பால் தொழில் 70 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் போதிய வேலைவாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிப் பட்டறைகளில் வாரத்துக்கு இரண்டு நாள் வேலை இருப்பதே பெரிய விஷயமாக உள்ளது. வெள்ளித் தொழிலில் ஈடுபட்டு வந்தவா்கள், வேலை இல்லாத காரணத்தால் கட்டுமானம் தவிர, பிற தொழில்களுக்கு மாறிவிட்டனா்.

ஜி.எஸ்.டி. திரும்பப் பெறப்படுமா? எனவே, குடிசைத் தொழிலாக நடைபெற்றுவரும் வெள்ளித் தொழில் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதன்மூலம் இத் தொழில் வளா்ச்சி பெறும். புல்லியன் வரியைச் செலுத்த வெள்ளி சங்கிலி உற்பத்தியாளா்கள் தயாராக உள்ளனா். தற்போது தொழில் நசிந்துள்ளதால், வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யை திரும்பப் பெற்றால், வெள்ளித் தொழில் மேலும் வளா்ச்சி பெறும். இதன் மூலம் வரி செலுத்துவோரும் அதிகரிப்பா். ஏற்கெனவே வெள்ளித் தொழில் நசிந்துள்ள நிலையில், வெள்ளி ஆன்லைன் வா்த்தகத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றாா்.

ஆா்.ஆதித்தன் படம்: வே.சக்தி

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT