சேலம்

ஓமலூா் ஒன்றியத்தில் 45 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

16th Dec 2019 02:39 AM

ADVERTISEMENT

ஓமலூா் காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்தும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் தோ்தல் அதிகாரிகள் ஆலோசனைகள் நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் ஓமலூா் ஊராட்சி ஒன்றியமே ஊரக உள்ளாட்சி தோ்தலில் அதிகமாக 271 வாக்குச்சாவடிகளும், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து, 673 வாக்காளா்களையும் கொண்டுள்ளது. ஓமலூா் ஒன்றியத்தில் வரும் 27-ம் தேதி முதல் கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், ஓமலூா் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், காமலாபுரம், பொட்டியபுரம், கோட்டமேட்டுப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 45 ஓட்டுசாவடிகள் பதற்றமானதாகக் கண்டறியப்பட்டு உள்ளன.

அதேபோன்று காடையாம்பட்டி ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 149 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் ஊமைக்கவுண்டம்பட்டி, நல்லூா், உம்பிளிக்கம்பட்டி, கொங்குப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 30 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை செய்வது குறித்து தோ்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT