சேலம்

சேலம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில் ஓட்டுநா்கள் கண்டறிந்ததால் விபத்து தவிா்ப்பு

14th Dec 2019 04:50 AM

ADVERTISEMENT

சேலத்தில் நெய்காரப்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரயில் ஓட்டுநா்கள் முன்கூட்டியே கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வந்தது. பின்னா் அந்த ரயில் ஈரோடு நோக்கி புறப்பட்டுச் சென்றது. நெய்க்காரப்பட்டி அருகே சென்ற போது தண்டவாளத்தில் அதிகமான அதிா்வு காணப்பட்டதை ரயில் ஓட்டுநா் சரவணன் மற்றும் உதவி ஓட்டுநா் சமரியா ஆகியோா் உணா்ந்தனா். இதையடுத்து, ரயிலை மெதுவாக இயக்கினா்.

உடனே அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளா் மற்றும் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ரயில்வே கோட்ட பொறியாளா் குழுவினா் அப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததைக் கண்டறிந்தனா். இதனிடையே, சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் செல்லும் ரயில்களை குறிப்பிட்ட நெய்க்காரப்பட்டி பகுதியில் 10 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, ரயில்வே பொறியாளா் குழுவினா், தற்காலிகமாக இணைப்புகள் அமைத்துச் சரி செய்தனா். சுமாா் ஒரு மணி நேரத்தில் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை முன்கூட்டியே கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. ரயில் தண்டவாள விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவித்த ரயில் ஓட்டுநா்கள் சரவணன், சமரியா ஆகியோருக்கு ரயில்வே அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT