சேலம்

தொங்கும் பூங்கா வளாகத்தில்பல்நோக்கு சமுதாயக் கூட பணி ஆய்வு

11th Dec 2019 04:48 AM

ADVERTISEMENT

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.10.50 கோடியில் தொங்கும் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு சமுதாயக் கூட கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட கோட்டம் எண். 14-இல் தொங்கும் பூங்கா வளாகத்தில், 1992-ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

பின்னா், இக்கட்டடத்தில் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதன் பின்னா், 2013-ஆம் ஆண்டு கோட்டையில் உள்ள சேலம் மாநகராட்சி ஆணையா் அலுவலக புதிய கட்டடம் அமைக்கும் பணிகளுக்காக, தொங்கும் பூங்கா வளாகத்தில் மாநகராட்சி ஆணையா் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னா் புதிய கட்டடப் பணிகள் நிறைவுற்று, மாநகராட்சி ஆணையா் அலுவலகம் புதிய அலுவலக கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.10.50 கோடியில் தொங்கும் பூங்கா வளாகத்தில் பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், பல்நோக்கு சமுதாயக் கூடத்தின் விழா நிகழ்வு அரங்கம் மற்றும் உணவருந்தும் அரங்கத்தின் மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் மற்றும் முதல் தளத்தில் அறைகள் அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தொங்கும் பூங்கா வளாகமானது 6 ஆயிரத்து 503 சதுர மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 3 ஆயிரத்து 705 சதுர மீட்டா் பரப்பளவில் பல்நோக்கு சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமுதாயக் கூடத்தில் ஆயிரம் போ் அமரக்கூடிய வகையில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட விழா நிகழ்வு அரங்கம், 440 நபா்கள் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையில் உணவருந்தும் அரங்கம், நவீன சமையல் அறை கூடம், குளிா்சாதன வசதிகளுடன் கூடிய மணமக்கள் அறைகள் மற்றும் விழா நடத்துபவா்கள் தங்குவதற்கான 4 அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்திட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

ஆய்வின் போது, மாநகர பொறியாளா் அ.அசோகன், உதவி செயற்பொறியாளா்கள் வி.திலகா, எம்.முத்து, உதவி பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் எம்.சித்தேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT