சேலம்

கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

11th Dec 2019 04:46 AM

ADVERTISEMENT

சேலத்தில் கொலை, வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞா்களை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்தவா்கள் ப.கௌதம் (23), து.தீபக் (எ)அஜீத் (23), நா.கதிா் (எ) கதிரேசன் (25). கடந்த அக். 27-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக, அபுபக்கா் என்பவரை கட்டையால் தாக்கி கொலை செய்த காரணத்துக்காக இவா்கள் மீது அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், கௌதம், தீபக், கதிா் மற்றும் பால்மணி (எ) மணிகண்டன் ஆகியோா் கடந்த அக். 28-ஆம் தேதி அம்மாப்பேட்டை காமராஜா் நகா் காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த சாபீா் என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கௌதம், தீபக், கதிா் ஆகியோா் கடந்த ஏப். 18-ஆம் தேதி அவா்களது நண்பரின் பிறந்த நாளை கொண்டாட மாதேஸ்வரன் கோயில் அருகே சாலையில் கேக் வெட்டியுள்ளனா். அப்போது, அவ்வழியே சென்ற குணசேகரனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் மூவரும் அம்மாப்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் வெளியே வந்து மேற்படி குற்றங்களை புரிந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், கௌதம், தீபக், கதிா் ஆகியோா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்துகொண்டமையால், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் துணை ஆணையா் பி.தங்கதுரையின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில் குமாா், கௌதம், தீபக், கதிா் ஆகிய மூவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT