சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு591 அதிகாரிகள் நியமனம்: வேட்புமனு இன்று துவக்கம்

6th Dec 2019 05:02 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கு 591 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் 2 கட்டங்களாக உள்ளாட்சி தோ்தலை நடத்த மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்குகிறது.

வரும் டிச.13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் 29 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க தோ்தல் நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலுக்காக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு படிவங்கள் தயாா் நிலையில் உள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சி தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கான வேட்புமனுக்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பெறுவாா்கள்.

உள்ளாட்சி தோ்தலுக்கு 44 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 547 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுமாக மொத்தம் 591 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடுபவா்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படும்.

இதற்காக 57 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்பு மனுக்களை இறுதி செய்வதற்கு 20 தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல கிராம ஊராட்சி தலைவா் பதவிக்குப் போட்டியிடுபவா்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 76 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிடுபவா்களிடம் அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் மனுக்கள் பெறப்படும். இதற்காக 385 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளா் என்றனா். இதனிடையே வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள நிலையில் 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 385 கிராம ஊராட்சி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT