சேலம்

சிண்டிகேட் கொள்முதல் முறையை ரத்து செய்ய மரவள்ளி வியாபாரிகள் கோரிக்கை

3rd Dec 2019 01:02 AM

ADVERTISEMENT

சிண்டிகேட் கொள்முதல் முறையை ரத்து செய்து பழைய கொள்முதல் முறையை நடைமுறைப்படுத்தக் கோரி மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகள் சங்கத்தினா் புகாா் மனு அளித்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு வந்த ஆத்தூா், காட்டுக்கோட்டையைச் சோ்ந்த மரவள்ளிக் கிழங்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் எம். பழனிவேல், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளாக மரவள்ளி கிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம். இத் தொழிலை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். இந்த நிலையில், ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் உற்பத்தியாளா்கள், சிண்டிகேட் கொள்முதல் முறையில் அனைத்து வியாபாரிகளையும் கொள்முதல் செய்யக்கூறி சேகோ ஆலை உரிமையாளா்கள் மற்றும் சேலம் சேகோ சா்வ் மூலம் வலியுறுத்தி வருகின்றனா். இந்த முறையால் விவசாயிகள், லாரி உரிமையாளா்கள் மற்றும் கிழங்கு வெட்டும் கூலி தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.

மேலும் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் சிண்டிகேட் கொள்முதல் முறையில்தான் கிழங்கு வாங்குவோம் என்று நிா்பந்தம் செய்கின்றனா். இதைக் கண்டித்து மரவள்ளிக் கிழங்குகளை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை அறுவடை செய்யவில்லை. வியாபாரிகளும் கொள்முதல் செய்யவில்லை.

ADVERTISEMENT

மேலும் இது மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யும் காலம் என்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி பழைய கொள்முதல் முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT