சேலம்

தொழிலதிபர் மனைவி காணவில்லை: போலீஸார் தொடர் விசாரணை  

30th Aug 2019 09:27 AM

ADVERTISEMENT

சேலத்தில் தொழிலதிபரின் மனைவி காணாமல் போனதைத் தொடர்ந்து, போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சேலம் சின்னதிருப்பதி சந்திரா கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஹரிகிருஷ்ணன்(40). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ரவிகிருஷ்ணன்(12) என்ற மகன் உள்ளார்.
 இவர்களது வீட்டு அறை சுவரில், "விமல் ஆட்கள் காப்பாத்துங்க ஹரி' என்று ரத்தத்தில் செவ்வாய்க்கிழமை எழுதப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்ச்செல்வியையும் காணவில்லை. புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 விசாரணையில் கிடைத்த தகவல்கள்:-
 தமிழ்ச்செல்விக்கு முன்னரே திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்செல்வி ஹரிகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 ஹரிகிருஷ்ணனுடன் வேலை செய்து வந்த விமல், தமிழ்ச்செல்வியின் இரண்டாவது மகளை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த தமிழ்ச்செல்வி, தனது மகளை உடனடியாக வேறொருவக்கு திருமணம் செய்து வைத்தார். சிறிது நாள்களில் இதனை தெரிந்து கொண்ட மகளின் கணவர், அவரை பிரிந்து சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது.
 இந்த நிலையில், விமலை பழிவாங்க தமிழ்ச்செல்வி திட்டமிட்டு நடத்திய நாடகமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் இரண்டாவது மகளையும் காணவில்லை. இதனால் குழப்பமடைந்த போலீஸார் தமிழ்ச்செல்வியின் முதல் மகளையும், ரவிகிருஷ்ணனையும் அழைத்து வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். அதில் தமிழ்ச்செல்வி, "10 நாள்களுக்கு எங்களைத் தேட வேண்டாம்' என கூறிச்சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
 இதையடுத்து தமிழ்ச்செல்வி தனது மகளுடன் வெளியூரில் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து அவர்களை தேட தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
 இதனிடையே சுவரில் எழுதப்பட்டிருந்த ரத்தத்தை போலீஸார் ஆய்வு செய்ததில், அது தமிழ்செல்வியின் ரத்தம் என உறுதி செய்யப்பட்டது.
 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழ்ச்செல்வி உயிரோடு தான் இருக்குறார் என்பது உறுதியாகியுள்ளது. அவரை தேடி வருகிறோம் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT