காட்டுக்கோட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் 40 கொக்கிகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டையில் விருத்தாச்சலம்-சேலம் ரயில் பாதையில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு ரயில் தண்டவாளங்களை இணைக்கும் 40 கொக்கிகளை புதன்கிழமை மர்ம நபர்கள் கழட்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதனை ரயில்வே பணியாளர் பாண்டுரங்கன் ஆய்வு செய்தபோது கண்டுபிடித்தார். இதையடுத்து, 3 ரயில்கள் வேகத்தின் அளவைக் குறைத்து பாதையை கடக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பணியாளர்கள் 40 கொக்கிளையும் மாட்டிவிட்டனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் கே.முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் சேலம் ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்ரவன்,துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்,ஆத்தூர் காவல் ஆய்வாளர் வி.ராஜீ ஆகியோர் நிகழ்விடத்தை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
கொக்கிகளை திருடர்கள் திருடிச் சென்றனரா அல்லது பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்னையின் காரணமாக இந்தக் கொக்கிகள் கழட்டப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.