புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஆரோக்கிய இந்தியா திட்டத் தொடக்க நிகழ்ச்சி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஹாக்கி வீரர் தயான்சந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆரோக்கிய இந்தியா திட்ட இயக்கம் தொடங்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.
இதன்படி, புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியானது காணொளி வாயிலாக பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆட்சிப் பேரவைக் கூடத்தில் வியாழக்கிழமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி,உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும் ஆரோக்கிய இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர், துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தலைமையில் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை உறுதியாகப் பேணுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.