சேலம்

விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 8 நீர்நிலைகளில் கரைக்கலாம்: ஆட்சியர்  

29th Aug 2019 09:09 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 8 நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 களி மண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றம் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
 நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
 விநாயகர் சிலைகளை கரைக்கச் செல்பவர்கள் சேலம் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை-குமரகிரி ஏரி, கன்னங்குறிச்சி-மூக்கனேரி, பூலாம்பட்டி-சந்தைப்பேட்டை, பில்லுக்குறிச்சி (காவேரி ஆறு) தேவூர்-கல்வடகம் கோம்பைக்காடு (காவிரி ஆறு), மேட்டூர்-காவிரி பாலம் (காவிரி ஆறு), கொளத்தூர்-சென்றாய பெருமாள் கோயில் (காவிரி ஆறு), கருமலைக்கூடல்-திப்பம்பட்டி (காவிரி ஆறு), மேச்சேரி-கூணான்டியூர், கீரைக்காரனூர் (காவிரி ஆறு) ஆகிய நீர்நிலைகளில் கரைக்கலாம்.
 மேலும் விவரங்களுக்கு, ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT