சேலம்

வாழப்பாடியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

29th Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்திய சேலம் ஆட்சியர் ராமன், தினசரி காய்கறிச் சந்தையில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
 சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியில் வாழப்பாடி பகுதி கிராமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கறிகளை வாழப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் தினசரி இயங்கும் தனியார் காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று வியாபாரிகளிடம் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
 எனவே, வாழப்பாடி பேருந்து நிலைய வளாகத்தில் மேல்தளம் அமைத்து, சுகாதாரமான முறையில் தினசரி காய்கறிச் சந்தையை ஏற்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் மற்றும் முதன்மைச் செயலருக்கு துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 மேலும், வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் சார்பில், முதல்வருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
 இந்நிலையில், வாழப்பாடி பகுதிக்கு புதன்கிழமை காலை திடீரென வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் காய்கறி கமிஷன் மண்டியில் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் இரா.முருகன் உள்ளிட்ட விவசாயிகள், வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
 விடுத்தனர்.
 கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறிய ஆட்சியர், தலைமைச் செயலரின் சொந்த கிராமமான துக்கியாம்பாளையத்துக்கு சென்று, சமுதாயக் கூடம் அமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், பனந்தோப்பு பகுதியை பார்வையிட்டார்.
 இதனையடுத்து, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரியகோயில் அணையில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தார்.
 ஆய்வின் போது, வாழப்பாடி வட்டாட்சியர் ஜாஹிர் ஹேஷன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மணிமேகலை, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக்பாஷா மற்றும் உயரதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT