வாழப்பாடி பகுதியில் இயங்கும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில், கடந்தாண்டு பிளஸ் 2 முடித்து வெளியேறிய மாணவ-மாணவியருக்கு இதுவரை மடிக்கணினி வழங்கப்படாததால் தவித்து வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ-மாணவியருக்கும் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வாயிலாக விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், வெள்ளாளகுண்டம், மேட்டுப்பட்டி, பெரியகிருஷ்ணாபுரம், தும்பல், கூட்டாத்துப்பட்டி, சுக்கம்பட்டி, திருமனூர், சிங்கிபுரம், பனைமடல், தாண்டானூர், வலசையூர் உள்ளிட்ட பகுதியில் இயங்கும் அரசினர் ஆண்கள், பெண்கள் மற்றும் இருபாலர் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவியர் அனைவருக்கும், பள்ளிக்கல்வித்துறை வாயிலாக கடந்த மார்ச் மாதத்தில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அனுப்பி வைத்தன.
இந்நிலையில், கடந்த மார்ச் 10-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, நடப்புக் கல்வியாண்டில், சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவியருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் நடத்தை விதி நடைமுறைப்படுத்தப்பட்டதால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இயங்கும் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 2018-2019-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவியர் மடிக்கணினியை பெற முடியாமல் உள்ளனர். எனவே, அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், ஒரு சில பள்ளிகளில் கடந்தாண்டு மாணவ-மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்க முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் தேவையான அளவுக்கு மடிக்கணினிகள் இருப்பில் உள்ளன. பள்ளிக் கல்வித் துறையில் இருந்து அனுமதி கிடைத்ததும், மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.