வாழப்பாடியில் மண்ணெண்ணெய் விநியோகிக்காததால் ஆவேசமடைந்த குடும்ப அட்டைதாரர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, வாழப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்திலுள்ள, மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தின் வாயிலாக, மாதந்தோறும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை மண்ணெண்ணெய் வாங்கிச் செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மண்ணெண்ணெய் வழங்குமிடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை நேரமாகியும் பெரும்பாலானோருக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவில்லை. இதனால், ஆவேசமடைந்த குடும்ப அட்டைதாரர்கள் மண்ணெண்ணெய் கேனுடன், சேலம்-கடலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வாழப்பாடி வருவாய்த்துறை உணவுப்பொருள் விநியோக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
சீரான மண்ணெண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.