ஏற்காடு வாழவந்தி ஊராட்சி புளியங்கடை கிராமத்துக்கு பொது மயான வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியங்கடை கிராமத்தில் பட்டா நிலதாரர்கள் குறைவாக உள்ளதால் இக் கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள் அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இக் கிராம மக்களுக்குப் பொது மயான வசதி இல்லாததால் வயதாகி உயிரிழப்போருக்கு ஈமச் சடங்குகள் செய்வதில் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. அருகில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பொது மயானத்துக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என புளியங்கடை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.