நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசினார்.
திராவிடர் கழக பவள விழா மாநாடு நிறைவு விழா சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது:
சேலத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. அப்போது 11 வயது சிறுவனாகக் கலந்து கொண்டேன். சோதனைகள் பல தாண்டி சாதனைகள் கொண்ட இயக்கமாக தி.க. உள்ளது. பெரியார், அண்ணா, காமராஜர், மு. கருணாநிதி, ஜீவா ஆகிய தலைவர்கள் அரும்பாடுபட்டு தன்மானத்தை உருவாக்கினர்.
பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறியது சமூக நீதிக்குத்தான். அதன் காரணமாகவே திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சமூக நீதிக்கு தற்போது சோதனை வந்துள்ளது. இட ஒதுக்கீடு மறுசீராய்வு வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார். அவர்கள் சூழ்ச்சியால் வெல்வார்கள். நாங்கள் தொடர்ந்து போராடி சமூக நீதியைக் காப்போம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழகம் தனித்துவம் பெற்று விளங்குவதற்கு வித்திட்ட பெருமை பெரியாரையே சாரும். பெரியாரியம், திராவிடம் தோற்றுவிட்டது எனக் கூறுவது அரசியல் அறிவின்மையாகும். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சாதி, மத அரசியல் 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்துவிட முடியாது.
பெரும்பான்மை சமூகம் கல்வி, அதிகாரம் பெறாமல் முடங்கிகக் கிடப்பதைக் கண்டு, ஆதிக்க சக்தியைத் தகர்க்க வேண்டும் என்ற வகையில், நடைமுறையில் உள்ள சிக்கல்களை அறிந்து கடவுள் மறுப்பை கையில் எடுத்தார் பெரியார் என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன்: இட ஒதுக்கீடு பிரச்னை தற்போது பெரிதாகி உள்ளது. இட ஒதுக்கீடு இல்லாமல் ஆக்கிவிடலாம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கருத்தை ஜனநாயகம் என்று சொல்வதாக உள்ளது. மாநில உரிமை பறிக்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: திராவிடர் கழகத்தை பெரியாருக்கு பிறகு, மணியம்மை அவரைத் தொடர்ந்து தூக்கிபிடித்து வருபவர் கி.வீரமணி ஆவார். தமிழகத்தில் எத்தனை ஆண்டு தவம் காத்தாலும் தாமரை மலராது. மார்கிசிஸ்ட் கட்சியும், பெரியார் கொள்கையும் நாணயத்தின் இரு பக்கமாக இருந்து செயல்படுகின்றன என்றார்.
மாநாட்டில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உரை மாநாட்டில் வாசிக்கப்பட்டது.