ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்தால் தேச விரோதிகள் என்பதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திராவிடர் கழகத்தின் 75 ஆம் ஆண்டையொட்டி பவள விழா மாநாடு நிறைவு விழா சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியது:
சேலத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தாய் கழகத்துக்கு வாழ்த்துக் கூற, திமுக தலைவராக வந்துள்ளேன். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட அழுக்கை சில ஆண்டுகளில் துடைத்துவிட முடியாது. எனவே, ஆயிரம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என தந்தை பெரியார் கூறினார்.
இட ஒதுக்கீடு மூலம் இந்திய அரசியல் சாசன சட்டத்தை நிர்ணயித்தது, சுய மரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம், இருமொழிக் கொள்கை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என பங்களிப்பை வழங்கியதற்கு பெரியார்தான் காரணம்.
பெரியார், அண்ணா ஆகியோர் சில காலம் பிரிந்திருந்தாலும், ஒரே கொள்கையில் பயணித்து, பின்னர் சேர்ந்தனர். திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என அண்ணா கூறினார்.
திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள், வீழ்ந்துவிட்டார்கள். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. திராவிடர் கழகம் முன்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
ஆனால், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து வரும் நம்மை தேச விரோதிகள், பிரிவினைவாதிகள் எனக் கூறுகின்றனர். மாநிலத்தையும், மாவட்டத்தையும் பிரித்து வரும் அவர்கள்தான் பிரிவினைவாதிகள்.
கடன் வாங்கிய பெரு முதலாளிகளை தப்ப விட்டவர்கள் தேசியவாதிகள், கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளா? ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் முதலில் தட்டி கேட்போம்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து 14 கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன ஆகப்போகிறது எனக் கேட்கின்றனர்.
பெரியார் சொன்னது போல், எந்தப் போராட்டமானலும் வெற்றி பெற்றோமா ? தோல்வி அடைந்தோமா ? என்பது முக்கியமில்லை போராடினேமா என்பதுதான் முக்கியம். அதை தான் நாமும் செய்து வருகிறோம்.
மத்திய அரசு நாடகம்...
தமிழகத்தை மத்திய அரசு பல்வேறு வகைகளில் பழிவாங்குகிறது. இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆட்டோமொபைல் துறை மிகவும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. வாகனங்கள் விற்பனை 31 சதவீதம் குறைந்துவிட்டது. இந்தியப் பொருளாதாரம் நிதிச் சிக்கலில் தவித்து வருகிறது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே காஷ்மீர் அந்தஸ்து ரத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது போன்ற நாடகங்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
பெரியார் மறைவின் போது, திமுக தலைவராக இருந்த மு. கருணாநிதி தனது சுற்றுப்பயணத்தை பெரியார் முடித்துக் கொண்டார். அதை நாம் தொடர்வோம் எனத் தெரிவித்தார். அதுபோல திராவிடர் கழகத்தோடு இணைந்து திமுக பக்க பலமாக இருக்கும் என்றார் அவர்.
மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொய்தீன், மதிமுக அவைத் தலைவர் துரைசாமி, திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சேலம் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், எம்எல்ஏ-க்கள் பொன்முடி, வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், நிர்வாகிகள் வீரபாண்டி ஆ.ராஜா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.