சேலம்

சினிமா மூலம் அரசியலில் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம்

28th Aug 2019 09:18 AM

ADVERTISEMENT

சினிமா கவர்ச்சி மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்து,  அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிடர் கழகத்தின் 75-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பவள விழா மாநாடு சேலத்தில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.  அம்மாபேட்டை கொங்கு வெள்ளாளத் திருமண மண்டபத்தில் துவங்கிய மாநாட்டில்  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு,   "திராவிடர் கழக வரலாறு' என்ற நூலை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி,    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,  மனித நேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா,   திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தேசிய கல்விக் கொள்கை வரைவு திரும்பப் பெற வேண்டும்.   அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அளிக்க வேண்டும்.   மாநிலத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் குரூப் பி,  சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கும் முழு உரிமை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளதைப்போல மத்திய அரசிலும் இட ஒதுக்கீட்டுக்கான தனி சட்டம் இயற்ற வேண்டும்.  மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும்.  கிரீமிலேயர் முறையை நீக்கிட வேண்டும்.  தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும்.  சட்டப்பேரவை,  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான உள் ஒதுக்கீட்டோடு இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் வேண்டும்.  நீதித் துறையில் சமூக நீதி வேண்டும்.  நீட் மற்றும் நெஸ்ட்  தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும்.  மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும்.  மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவையாகும்.
இந்தி, சம்ஸ்கிருதத் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.  காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து என்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.  சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக்கி,  அரசியலில் அடி எடுத்து வைத்து,  அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  கையால் மனிதக் கழிவுகளை எடுக்கும் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.  குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT