ஆத்தூரை அடுத்துள்ள கல்பனூர் ஊராட்சியில் உள்ள எம்.எஸ். சித்தா சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவத் திருவிழா அதன் நிறுவனர் எம். சுகவனேஸ்வரன் தலைமையில் நடைற்றது.
எம்.எஸ். சித்தா சிகிச்சை மையத்தின் வேதியிலர் பி. சரவணன் வரவேற்றார். 300-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், பாரம்பரிய சித்த வைத்தியர்கள், சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னாள் சென்னை மாவட்ட சித்த மருத்துவ ஆய்வு அலுவலர் என். கெளரி ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்கி சிகிச்சையைத் துவக்கி வைத்தார்.
இதையடுத்து சித்த மருத்துவ நூல்கள் வெளியீட்டு விழாவில், அனுபவ சித்த மருத்துவம் என்ற நூலை மதுரை சித்தா, வர்மா மருத்துவர் பி. சிவசுப்ரமணி வெளியிட தேனியைச் சேர்ந்த எஸ். ராமலிங்க சுவாமி பெற்றுக் கொண்டார்.
பாடாணங்கலும் உலோகங்களும் என்ற நூலை மதுரை சித்த வைத்திய சங்கத்தின் முன்னாள் தலைவர் மருத்துவர் எஸ். லாசர் ஸ்டாலின் வெளியிட வேலூர் சித்த மருத்துவர் எஸ். சீனிவாசன் பெற்றுக் கொண்டார். மேலும், ராஜமருந்துகள், ஆரோக்கிய வாழ்வுக்கான அருமருந்துகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
விழாவில் அகத்தியர் சிலையை நிறுவனர் எம். சுகவனேஸ்வரன் திறந்து வைத்தார்.சித்தா மருந்துகள் கண்காட்சி நடைபெற்றது. மேலும், சித்தா மருந்துகள் தயாரிக்க பயன்படும் கருவிகளும் கண்காட்சியும் நடைபெற்றன.
நூற்றுக்கு நூறு குணமளிக்கும் சித்த மருந்துகள் என்ற தலைப்பில் மருத்துவர் எம். சுகவனேஸ்வரன், மருத்துவர் பி. சிவசுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியை மருத்துவர் ஜெ. சமூகநீதி தொகுத்து வழங்கினார். மருத்துவர் பா. ஆகாஷ் நன்றி கூறினார்.