வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்து சேலத்தில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாநகரப் பொருளாளர் காஜா மொய்தீன் தலைமையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உதவி ஆணையர் ஈஸ்வரன், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வழக்குரைஞர்கள் மறியல்: சேலம் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர்களின் சிலைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்குரைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்குரைஞர்கள் பொன்னுசாமி, இமயவரம்பன், சந்தியூர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல ஆட்சியர் அலுவலகம் அருகே அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில இளைஞரணிச் செயலாளர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் அம்பேத்கர் சிலை உடைப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.