சேலம்

அரசு துறை, தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனிதக் கடத்தலை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு

23rd Aug 2019 09:22 AM

ADVERTISEMENT

மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனிதக் கடத்தலை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு தெரிவித்தார்.
 சேலத்தில் மனிதக் கடத்தல் தடுப்பு தொடர்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு பேசியது:
 மனிதக் கடத்தலில் பெண்கள், குழந்தைகளைக் கடத்திச் செல்வது முதன்மையானதாக உள்ளது. அதேபோல, கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் நடத்தப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும்போது வாகன ஓட்டுநர் உள்ளிட்ட விவரங்களை நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, மறுவாழ்வு பெற நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல பெண்கள், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனிதக் கடத்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் மனிதக் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் பேசுகையில், மனிதக் கடத்தல் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் நுணுக்கமாக நடைபெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி தொழிலாளர்களை அடிமையாக நடத்துதல், பெண்கள், குழந்தைகளை கடத்துதல் என பல்வேறு வகையில் மனிதக் கடத்தல் நடைபெறுகிறது. நாட்டில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா, ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் நடைபெறுகிறது. நேபாளத்தில் இருந்து பாலியல் தொழிலாளிகள் வரவழைக்கப்படுகின்றனர். எனவே, மனிதக் கடத்தல் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
 சென்னையைச் சேர்ந்த ஐ.ஜே.எம். தன்னார்வலர் சாராழ் சாந்தினி பேசுகையில், கண்ணுக்குப் புலப்படாத வகையில் ஒருங்கிணைந்து பெண்கள், குழந்தைகள் கடத்தல் நடைபெறுகிறது. இதுபோன்ற செயல்களை நீதித் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ நிறுவனம் ஆகியவை இணைந்து தடுத்திட வேண்டும். மனிதக் கடத்தல் நடைபெறும் இடங்களான அரிசி ஆலைகள், குவாரிகள், தொழில் நிறுவனங்களை அடையாளம் காண வேண்டும். மேலும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்திட வேண்டும். பள்ளி, கல்லூரி என அனைத்துத் தரப்பு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
 நிகழ்ச்சியில் ஒன் ஸ்டாப் கிரைசிஸ் டீம் என்ற அரசு துறை, தன்னார்வ நிறுவனங்கள் இணைந்தக் குழு தொடங்கி வைக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.வி.சக்திவேல், வழக்குரைஞர் கந்தசாமி பிரபு, காவல் உதவி ஆணையர் நமசிவாயம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி, சமூக நலத் துறை அலுவலர் கிருத்திகா, காவல் ஆய்வாளர் சின்னதங்கம், தன்னார்வலர் அலமேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT