சேலம்

சேலம் ரயில்வே கோட்டம் நடப்பாண்டில் ரூ.303 கோடி வருவாய் ஈட்டியுள்ளது: கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ்

16th Aug 2019 09:31 AM

ADVERTISEMENT

சேலம் ரயில்வே கோட்டம் நடப்பாண்டில் ரூ.303.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தெரிவித்தார்.
 சேலம் ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
 பின்னர் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் பேசியது:
 சேலம் ரயில்வே கோட்டம் 2018-19 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த செயல் திறன் கேடயத்தைப் பெற்றுள்ளது. அதேபோல சிறந்த வணிக செயல்திறன் கேடயம், மனித செயல் திறன் கேடயம், மின் திறன் கேடயங்களைப் பெற்றுள்ளது.
 சேலம் கோட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.303.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.301 கோடி வருவாய் கிடைத்து.
 நடப்பாண்டின் சரக்கு வருவாய் ரூ.23.60 கோடியாகும். பயணிகள் மூலம் ரூ.197.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.4.57 கோடி வருவாய் உள்ளது.
 சேலம் கோட்டத்தில் உள்ள 73 ரயில் நிலையங்களில் 55 ரயில் நிலையங்களில் வை-பை (கம்பியில்லா இணைய வசதி) வழங்கப்படுகிறது. மீதியுள்ள 18 ரயில் நிலையங்களில் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது.
 மேலும் ரயில் நிலையங்களில் சுற்றி திரிந்த 284 குழந்தைகளை மீட்டு உரிய முறையில் ஒப்படைத்துள்ளோம். ரயில்வே பாதுகாப்பு சட்டத்தை மீறிய நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து ரூ.21.73 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர்.
 ரயில்வே ஓய்வூதியர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவு 75 சதவீத அளவுக்கு முடிந்துள்ளது. சேலம் ரயில் நிலைய முன்பக்க மேம்பாட்டு பணி முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் எஸ்கலேட்டர், ஒரு மின்தூக்கி (லிப்ட்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டில் ஒரு எஸ்கலேட்டர் அமைக்கப்பட உள்ளது.
 வரும் 2025-க்குள் அனைத்து ஆளில்லா ரயில்வே கேட்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், சேலம் கோட்டத்தில் 36 ரயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன என்றார்.
 விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை, முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், பாதுகாப்பு படை ஆணையர் சீனிவாசராவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT