சேலம்

சுதந்திர தின விழாவில் ரூ.8 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கல்

16th Aug 2019 09:31 AM

ADVERTISEMENT

சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, தியாகிகளை கெளரவித்து, 85 பயனாளிகளுக்கு ரூ.8.09 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
 சேலம் மாவட்டத்தில் 73-வது சுதந்திர தினவிழா காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
 பின்னர், தியாகிகளை கெளரவித்து, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
 விழாவில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டில் எவ்வித விடுப்பும் எடுக்காமல் 100 சதவிகிதம் பள்ளிக்கு வருகை புரிந்த 7 ஆசிரியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மகளிர் திட்டம் சார்பில் 2018 - 19 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கிய வங்கிகளில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் சிறந்த வங்கிக் கிளைகளாகத் தேர்வு செய்யப்பட்ட ஒமலூர் இந்தியன் வங்கி (மைக்ரோ சேட்), அயோத்தியாப்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் ஆத்தூர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய மூன்று வங்கிகளுக்கும், 5 சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், 9 சிறந்த கள பணியாளர்களுக்கும் விருதுகளையும் வழங்கினார்.
 மேலும், விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிக்கு ரூ.51,500 மதிப்பீட்டில் வங்கிக் கடன் மானியம் மற்றும் கால் தாங்கிகளும், வருவாய் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.9,360 வீதம் ரூ.46,800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.9,500 வீதம் ரூ.47,000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.4,400 மதிப்பிலான சூரிய ஒளி விளக்குப்பொறியினையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 பயனாளிகளுக்கு ரூ.20,000 வெங்காய பரப்பு விரிவாக்க மானியமும், மாவட்ட இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற 60 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6,30,000 மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.8,09,700 மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
 அதைத்தொடர்ந்து, வாழப்பாடி, ஸ்ரீ சாரதா மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 140 மாணவ, மாணவியர்கள், ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 145 மாணவ, மாணவியர், புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 280 மாணவ, மாணவியர், சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 210 மாணவியர், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் பங்கேற்கும் மல்லர் கம்பம் நிகழ்ச்சியும், ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 340 மாணவ, மாணவியர் என மொத்தம் 1,162 மாணவ, மாணவியர் பங்கேற்ற வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவாக சிறப்பாக கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாநகர காவல் ஆணையர் த.செந்தில்குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பெ.தங்கதுரை, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகர பொறியாளர் அ.அசோகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
 இதனைத் தொடர்ந்து கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணக்காடு மாநகராட்சி காமராஜர் மகளிர் மேல் நிலைப்பள்ளி, அம்மாபேட்டை பாவடி மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி, அம்மாபேட்டை அன்னை இந்திராகாந்தி மகளிர் மேல் நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சார்ந்த மாணவியர்களின் நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 மேலும் சிறந்த முறையில் பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாநகராட்சி பள்ளி அளவில் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டில் 12- ம் வகுப்பு மற்றும் 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவியர்களை பாராட்டி ரூ.30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் 10 பேருக்கு, கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாணவிகளை பாராட்டியும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 மேலும், 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் பாராட்டி கெளரவிக்கப்பட்டது.
 சேலம் உருக்காலையில் சுதந்திர தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் தனேஜா கொடியேற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் விழாவில் நிர்வாகஇயக்குநர் சஞ்சீவ் தனேஜா, ஆலையின் சமூக பொறுப்பு முன்முயற்சிகள் மூலம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுப்புற வளர்ச்சிக்கு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் பாராட்டினார். மேலும் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளர்களுக்கு ஜவாஹர்லால் நேரு விருதுகளை வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 விழாவில் அணிவகுப்பில் சிறந்து விளங்கியோருக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
 எடப்பாடியில்...
 எடப்பாடி பகுதியில் சுதந்திரதினக் கொண்டாட்டம் விமர்சையாக நடைபெற்றது. எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்வில், வட்டாட்சியர் கேசவன் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து வருவாய்த் துறையினரின் உறுதிமொழி ஏற்ப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
 எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டி.கதிரேசன் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதேபோல் எடப்பாடி நகராட்சி அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எடப்பாடி மின்வாரிய அலுவலகம், நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களிலும், சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT