சேலம்

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் வெண்டைக்காய் சாகுபடி

11th Aug 2019 03:23 AM

ADVERTISEMENT


கெங்கவல்லி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலான தம்மம்பட்டி, மல்லியகரை,  வீரகனூர், தெடாவூர், செந்தாரப்பட்டி  பகுதிகளில் அதிக விளை நிலங்களில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால், விவசாயிகள் காய்கறிகள் சாகுபடி செய்வதைத் தவிர்த்து மானாவாரி பயிரான மக்காசோளத்துக்கு மாறி வருகின்றனர். இந் நிலையில், சில விவசாயிகள் மட்டுமே வெண்டைக்காய் சாகுபடி செய்கின்றனர்.
தற்போது பருவ மழையும் பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வெண்டை செடிகளில் அஸ்வினி, பச்சைப்பூச்சி நோய் தாக்கியதோடு தண்ணீரின்றி காய்ந்துவருகிறது.
தற்போது விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். அதனால் வெண்டைக்காய் கடும் வறட்சியிலும் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
இதனிடையே வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைக்கும் என நினைத்து அறுவடை செய்து சந்தைக்கு எடுத்து செல்லும் போது ,அங்கு உரிய விலை கிடைப்பதில்லை. தலைவாசல் தினசரி மார்க்கெட், தம்மம்பட்டி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ. 12 எனக் குறைவான விலையே கிடைக்கிறது.
விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து, வெளிச் சந்தையில் ரூ. 40-க்கும்மேல் விலை வைத்து லாபத்துக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வெண்டைக்காய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும், வேளாண்மைத் துறை சார்பில் உரம்  மற்றும் பூச்சி மருந்துகளை வழங்குவதோடு காய்கறிகளுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT