சேலம்

காவிரி கரையோர மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுரை

11th Aug 2019 03:25 AM

ADVERTISEMENT


 கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி கரையோரப் பகுதி மக்கள மேடான இடங்களுக்குச் செல்லுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மேட்டூர் அணை பகுதிகளான மூலக்காடு, பன்னவாடி, கோட்டையூர், காவேரிபுரம், கோவிந்தப்பாடி, கருங்கல்லூர், செட்டியூர், சின்ன மேட்டூர், கோனூர் மேற்கு, கூனான்டியூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் வருவாய் துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், காவல் துறையின் பயிற்சி பெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா  தொலைபேசி எண்.1077-ஐ தொடர்பு கொள்ளவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT