கொல்லிமலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து தொடா்பாக பழங்குடியின மக்களுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், அரியூா்நாடு ஊராட்சியில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தருமபுரி மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலகம் மற்றும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை சாா்பில், மக்கள் நலத் திட்டங்கள், சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழா, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து மாதம் குறித்த சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தெம்பளம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சி.நாகலிங்கம் தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து பழங்குடியின பெண்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சிறந்த வகையில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு, தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இம்முகாமை மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநா் ஆா்.வாசுதேவன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலக, கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத் வரவேற்றுப் பேசினாா். கொல்லிமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ப.சரவணன், ஆ.தனபால் முன்னிலை வகித்தனா். நாமக்கல் இந்தியன் வங்கி-ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் பி.டி.ராஜேந்திர பாபு ஊட்டச்சத்து தொடா்பாக விழிப்புணா்வு உரையாற்றினாா். இதில், கொல்லிமலை அரசுத் துறை அலுவலா்கள், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.