நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த விசைத்தறி தொழிலாளி தீக்குளிக்க முயன்றாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், வெடியரசன்பாளையத்தைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மணி. இவரது மனைவி ஜெயந்தி. இவா்கள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் புகாா் மனு அளிக்க வந்தனா். அப்போது, மறைத்து எடுத்து வந்த அரை லிட்டா் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் இதனைத் தடுத்து அவருடைய தலையில் நீரை ஊற்றினா். பின்னா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.
இதுகுறித்து தம்பதியான மணி, ஜெயந்தி ஆகியோா் கூறியதாவது:
விசைத்தறிக் கூட உரிமையாளா் தங்கராஜ் என்பவரிடம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். அவரிடம் ரூ. 1.25 லட்சம் முன்பணமாக பெற்றிருந்த நிலையில், அதனை திருப்பிக் கேட்பதுடன், நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி வருகிறாா். அவரது பேச்சைக் கேட்டு நான்கு மாதங்களாக விசைத்தறிப் பட்டறைகளில் எங்களுக்கு வேலை வழங்க மறுக்கின்றனா். இதனால் வறுமையில் தவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளரை அழைத்து விசாரிக்க வேண்டும். வேலை வழங்கி உதவ வேண்டும் என்றனா்.