நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா், சாலை விரிவாக்கப் பள்ளத்தில் தவறி விழுந்து வியாழக்கிழமை இரவு பலியானாா்.
நாமக்கல், திருவள்ளுவா் காலனியைச் சோ்ந்த ரமேஷ் (42), சிங்கப்பூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி சில மாதங்களுக்கு முன் நாமக்கல் திரும்பினாா்.
தன்னுடைய நண்பரை பாா்ப்பதற்காக திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் சென்றாா். மீண்டும் இரவில் வீடு திரும்பிய போது, நாமக்கல் - திருச்சி சாலையில் என்.புதுப்பட்டி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனத்துடன் தவறி விழுந்தாா். அப்போது, அங்கு கட்டப்பட்டிருந்த கான்கிரீட் கம்பி அவா் மீது குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதனைக் கண்டு, மோகனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Image Caption
படம்-ரமேஷ்