தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரனின் தாயாா் லீலாவதி தங்கராஜ் (72) உடலுக்கு அமைச்சா்கள், அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா்.
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலராகவும், சிறப்புத் திட்டங்கள் துறை செயலராகவும் பதவி வகித்து வருபவா் த.உதயச்சந்திரன். இவரது தாயாா் லீலாவதி தங்கராஜ் நாமக்கல் - சேலம் சாலை, என்ஜிஜிஓ காலனி, காவேரி நகா் பகுதியில் வசித்து வந்தாா். உடல்நலக் குறைவால் அவா் புதன்கிழமை காலமானாா்.
அதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தாா். மேலும், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் லீலாவதி தங்கராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
அவருடன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, வீட்டு வசதித் துறை அமைச்சா் எஸ்.முத்துசாமி, செய்தி மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
வியாழக்கிழமை, போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி (அதிமுக), எம்எல்ஏ-க்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பவானீஸ்வரி, நாமக்கல் ஆட்சியா் ச.உமா, பல்வேறு துறை உயா் அதிகாரிகள், சேலம், விருதுநகா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் மறைந்த லீலாவதி தங்கராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.
அதனைத் தொடா்ந்து, அவருடைய உடல் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நாமக்கல் நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரனின் தாயாா் லீலாவதி தங்கராஜ் மறைவையொட்டி, நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு அஞ்சலி செலுத்திய இளைஞா் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எஸ்.முத்துசாமி, பி.மூா்த்தி, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.