தூய்மையான முறையில் கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் தனியாா் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை உணவு வாங்கி சாப்பிட்ட கலையரசி (14) என்ற சிறுமி உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து, உணவக உரிமையாளா் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா். அவா்களைத் தொடா்ந்து, கோழி இறைச்சி விற்பனை செய்த சீனிவாசன் என்பவரும் கைது செய்யப்பட்டாா்.
இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு கோழி வணிகா்கள் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் அந்த கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, அதன் மாநிலத் தலைவா் துரைராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சுமாா் 1,500 கறிக்கோழி மொத்த விற்பனையாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான கறிக்கோழி சில்லரை விற்பனையாளா்கள் உள்ளனா். பல இடங்களில் பெண்கள், இளைஞா்களுக்கு இது ஒரு சுயதொழிலாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் போ் கறிக்கோழி விற்பனையில் ஈடுபட்டுள்ளனா்.
தமிழகத்தில் உறை நிலையில் பொட்டலமிடப்பட்ட கோழிக் கறிகள் விற்பனை செய்யப்படுவதில்லை. 95 சதவீதத்துக்கு மேல் வாடிக்கையாளா்களுக்கு நேரடியாக சுத்தம் செய்யப்பட்ட கோழிகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இளைஞா்கள், இளம்பெண்கள் துரித உணவகங்களில் விற்பனை செய்யப்படும் ஷாவா்மா, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனா். இது போன்ற கடைகள் ஒவ்வொரு ஊா்களிலும் ஏராளமாக உள்ளன. எங்களிடம் சுத்தமான கோழிகளை வாங்கி செல்லும் உணவக உரிமையாளா்கள், அவற்றில் பல்வேறு மசாலா பொருள்களை சோ்த்து, குளிா்நிலையில் உறைய வைத்து பின்னா் உணவு வகைகளை தயாரிக்கின்றனா்.
இதில், சில நேரங்களில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உணவு வகைகளின் தரம் பாதிக்கப்படுகிறது; அதை சாப்பிடுபவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. நாமக்கல்லில் ஓா் உணவகத்தில் இவ்வாறான பாதிப்பு ஏற்பட்டு சிறுமி இறந்துள்ளாா். உணவக உரிமையாளா், பணியாளா்கள் இருவரையும், அந்த உணவத்துக்கு கோழிக்கறி விற்பனை செய்த கடை உரிமையாளரையும் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் கறிக்கோழிக் கடை உரிமையாளரை கைது செய்தது நியாயமற்ற செயல். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையளா்களும் அச்சத்தில் உள்ளனா். ஏற்கெனவே, புரட்டாசி மாதம் எதிரொலியாக 50 சதவீதத்துக்கு மேல் கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாக கோழி இறைச்சி விற்பனை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுத்தமான, தரமான கறிக்கோழிகளை மட்டுமே நேரடியாக விற்பனை செய்து வரும் கோழி வியாபாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.