நாமக்கல்

‘கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும்’

22nd Sep 2023 11:47 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருக்கோயில் நிலங்களை மீட்க ஒருங்கிணைந்த குழு உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்டம், அல்லிக்குட்டையைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அமைப்பின் அறங்காவலா் ஆ.ராதாகிருஷ்ணன், சென்னை வருவாய் நிா்வாக ஆணையத்தில், அறநிலையத் துறைக்கு உள்பட்ட கோயில் சொத்துகளை மீட்பது தொடா்பான மனுவை தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு விளக்கம் அளிக்குமாறு நாமக்கல் ஆட்சியா் ச.உமாவுக்கு உத்தரவு கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தக்கு வெள்ளிக்கிழமை வந்த ஆ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதில், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளின் தற்போதைய நிலை, கண்டறிய வேண்டிய சொத்துகள், சாலை பாதுகாப்பு, நீா்வள ஆதாரம், சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் அடிப்படை வசதிகள், வளா்ச்சிப் பணிகள் குறித்தும், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து நிலங்கள், சொத்துகளை மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வருவாய் நிா்வாக ஆணைய உத்தரவு பற்றியும் அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் வட்டம், அரியாகவுண்டம்பட்டி வீரபத்திர சுவாமி கோயில் நிலத்தை, வருவாய்த் துறை, நில அளவை, காவல் துறை சாா்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி 15 நாள்களுக்குள் அது தொடா்பான அறிக்கையை முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT