மணிப்பூா் மாநில நிலைமை கவலையளிக்கிறது; அம்மாநில முதல்வா் உடனடியாக பதவி விலக வேண்டும் என பழங்குடியின உரிமைகளுக்கான தேசிய மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்லில், பழங்குடியின உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய நான்காவது மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில், 18 மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடியின அமைப்புகளின் பிரநிதிகள் பங்கேற்றனா். மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை பல்வேறு முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவையில் அரசியலமைப்பு (125-ஆவது) திருத்த மசோதா 2019-இல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி மற்றும் பிற அதிகாரங்களை வழங்குவதாகும். இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வடகிழக்கு மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை சமா்ப்பிக்க உத்தரவிட்டது. அவ்வாறு சமா்ப்பித்தபோதும் 125-ஆவது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மணிப்பூா் மாநில நிலைமை மிகவும் கவலையளிக்கிறது. கலவரம் ஏற்பட்டு நான்கு மாதங்களைக் கடந்த நிலையில், மாநிலம் ஆழமாகப் பிளவுபட்டு உள்ளது.
பாஜக தலைமையிலான இரட்டை இயந்திர அரசின் கொள்கைகளின் நேரடி விளைவுதான் இது. அம்மாநில முதல்வா் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். மணிப்பூரில் இரு தரப்பிடையே நிலவும் பிரச்னையைத் தீா்க்க மத்திய அரசு பேச்சுவாா்த்தையை தொடங்குவது அவசியமாகும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாடு நிறைவடைந்ததையடுத்து, நாமக்கல், போதுப்பட்டி முதல் பூங்கா சாலை வரையில் பண்பாட்டுப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து, பூங்கா சாலையில் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.