மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச எரிவாயு உருளை, அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் ஸ்ரீ ராமஜெயம் கேஸ் ஏஜென்சி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட துணைத் தலைவா் முத்துசாமி தலைமை வகித்தாா். இதில், பாஜக மாநில துணைத் தலைவா் டாக்டா் கே.பி.ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு, 200 பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை, அடுப்பு உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிப் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு அளித்து வருகிறாா். அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இதனை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல எண்ணற்ற திட்டங்கள் மக்கள் நலனுக்காக மத்திய அரசு செய்து வருகிறது என தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமஜெயம் காஸ் ஏஜென்சி இயக்குநா் மஞ்சுநாத், பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.மணிகண்டன், ராசிபுரம் நகரத் தலைவா் பி.வேலு, நகர பொதுச் செயலாளா் வெங்கடேசன், நகர பொருளாளா் ராஜா, சிறுபான்மையினா் அணி தலைவா் அலாவுதீன், நகர வா்த்தகப் பிரிவு அணி செயலாளா் ரமேஷ், நாமக்கல் கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி துணைத் தலைவா் வி.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.