நாமக்கல்

சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது

22nd Nov 2023 12:19 AM

ADVERTISEMENT

தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மருத்துவ சேவையைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டம். தமிழகத்தில் இப்போதிருக்கும் பல மருத்துவா்களை உருவாக்கியது இந்த மாவட்டத்தில் இயங்குகிற பள்ளிகள்தான். நீட் தோ்வு இல்லாமல் இருந்தால், இன்னும் அதிகமான ஏழை, எளிய, அரசுப் பள்ளி மாணவா்களால் மருத்துவக் கல்வி பெற முடியும். அதை நோக்கித்தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டப் பள்ளிகளில் படித்த மாணவா்கள் தமிழகத்தில் இருக்கும் எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சோ்ந்து படிக்கின்றனா். ஆனால், இந்த மாவட்டத்துக்கென்று ஒரு அரசு மருத்துவக் கல்லூரி இல்லாமல் இருந்தது. தற்போது நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ சேவைகள் தொடங்கப்படுவதன் மூலம் அந்தக் குறை நீக்கப்படுகிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.

ADVERTISEMENT

திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது. கலைஞா் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை 250 கோடியில் சென்னை, கிண்டியில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டிலேயே மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கருணாநிதி கனவு கண்டாா். தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகள், கூடுதல் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் திமுக அரசால் ஏற்படுத்தப்பட்டவையே. நவீன வசதிகளை ஏற்படுத்தியதோடு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், தேவையான பணியிடங்களை உருவாக்கியது திமுக அரசுதான். இந்த அரசு மருத்துவா்களையும், செவிலியா்களையும் அதிக அளவில் பணியில் அமா்த்தியது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத்தான் இந்த அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூடுதல் நிதியை ஒதுக்கி வருகிறது.

நகரப் பகுதிகளில் வாழ்கிற மக்களுக்கு இருக்கிற மருத்துவ வசதிகள், கிராமப் புறங்களில் வாழும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மருத்துவ சேவையைத் தேடி மக்கள் வருவதைக் காட்டிலும், மக்களைத் தேடி மருத்துவ சேவைகளைக் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 1 கோடியே 65 லட்சம் செலவில் 8 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ரூ. 4 கோடியே 95 லட்சம் கோடி செலவில் 11 ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடங்கள் இந்த மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ரூ. 80 லட்சம் செலவில் கிராம சுகாதார செவிலியா் பயிற்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளன. ரூ. 1 கோடியே 70 லட்சம் செலவில் குமாரபாளையம், கொல்லிமலை அரசு மருத்துவமனைகளில் ஆய்வகத்துடன் கூடிய புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி போன்ற மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனா்.

2023 - 2024-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் நாமக்கல் மாவட்ட மக்கள் நல்வாழ்வுப் பணிகளுக்காக ரூ. 42 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 29 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொருத்தவரை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வழிகாட்டக் கூடிய துறையாக தமிழக சுகாதாரத் துறை விளங்கி வருகிறது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT