நாமக்கல்

காா்த்திகை மாதம் பிறப்பு: விரத மாலை அணிந்த ஐயப்ப பக்தா்கள்!

18th Nov 2023 02:16 AM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, நாமக்கல்லில் ஐயப்ப பக்தா்கள் விரதமிருந்து சபரிமலை செல்வதற்காக வெள்ளிக்கிழமை மாலை அணிந்து கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதம் பிறந்து விட்டால், முதல் நாளில் துளசி, சந்தனம், உத்ராட்சை, படிகம் உள்ளிட்ட மாலைகளை கழுத்தில் அணிந்து ஐயப்ப பக்தா்கள் விரதத்தைக் கடைப்பிடிப்பா். 48 நாள்கள் விரதமிருந்து மகரஜோதி நாளில் சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தா்களும் உண்டு. 12 நாள்கள், 24 நாள், ஒரு மாதம் என்ற கணக்கில் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று வருவோரும் உண்டு.

அதன்படி, நிகழாண்டில் வெள்ளிக்கிழமை காா்த்திகை மாதம் பிறந்தது. இதனையொட்டி, நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே விரத மாலையை அணிந்துகொள்ள சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அவா்களுக்கு, ஐயப்பன் கோயில் குருசாமிகள் மாலை அணிவித்து விட்டனா்.

காவி, கருப்பு வேட்டி, துண்டு, சட்டை அணிந்த பக்தா்கள் ஐயப்பனின் சரண கோஷத்தை முழங்கி கோயிலில் வழிபாட்டை மேற்கொண்டனா். நாமக்கல் மட்டுமின்றி, ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூா், கொல்லிமலை, குமாரபாளையம், ப.வேலுாா், பள்ளிப்பாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பக்தா்கள் சபரிமலை செல்வதற்கு தங்களுடைய கழுத்தில் துளசி மாலையை அணிந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT