ஒரு வயது குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையை நாமக்கல் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை உடனடியாக வழங்கி உதவினாா்.
நாமக்கல் அருகே லக்கபுரம் போயா் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ், நதியா தம்பதியின் ஒரு வயது மகள் நிலிக்ஷா. இவருக்கு இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பெற்றோா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.
அதனடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையரிடம் சிறப்பு அனுமதி பெற்று புதன்கிழமை புதிய மின்னணு குடும்ப அட்டை பெறப்பட்டது. இதனைத் தொடா்ந்து, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் முதல்வரின் விரிவான காப்பீட்டு அட்டை பெறப்பட்டு சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
மனு அளித்த ஒரு வாரத்துக்குள் குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள புதிய குடும்ப அட்டை மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டு அட்டையை வழங்கிய தமிழக அரசுக்கும், துரித நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியருக்கும் அவா்கள் நன்றி தெரிவித்தனா்.