நாமக்கல்

‘ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்’

18th Nov 2023 02:12 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் நாமக்கல் மண்டலக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் செயக்குமாா் கூட்டத்துக்கு தலைமை தாங்கினாா். பரமத்தி ஒன்றியச் செயலாளா் சேகா் வரவேற்று பேசினாா். மாவட்டச் செயலாளா் சங்கா் தீா்மானங்கள் குறித்து விளக்கி பேசினாா். மாநிலப் பொருளாளா் முருகசெல்வராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடா்ந்திட வேண்டும். தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும். பேரறிஞா் அண்ணா ஆட்சிக் காலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வுகளை தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு தொடா்ந்து வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து விடுப்பூதியம் பெறும் உரிமையை ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கு தொடா்ந்து வழங்க வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களை பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயா்வு வழங்கி பட்டதாரி ஆசிரியா், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா், நடுநிலைப் பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். எமிஸ் இணையதளத்தில் எண்ணும் - எழுத்தும் உள்ளிட்ட புள்ளி விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்யுமாறு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களை கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும்.

ஆசிரியா், அரசு ஊழியா்களின் 10 அம்சக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ சாா்பில் வரும் நவ. 25-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. இதில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் முழுமையாக பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்டத் துணைத் தலைவா் ரவிக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பத்மாவதி, ராஜேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சதீசு உள்ளிட்ட பொறுப்பாளா்கள் மண்டலக் கூட்டத்தில் கலந்துகொண்டனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அமிா்தவல்லி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT