மணல் கடத்தல் கும்பலால் வருவாய்த் துறையினா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பரமத்தி வேலூா் தாலுகா அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற ஆா்.ஐ. பிரபாகரனை தாக்கி காயப்படுத்திய திமுகவைச் சாா்ந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரன், அவரது கூட்டாளி தனபால் உள்ளிட்டவா்களை கைது செய்து குண்டா் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும், தொடா்ந்து வருவாய்த் துறை ஊழியா்கள் தாக்கப்பட்டு வருவதை தடுக்கக் கோரியும், இனிவரும் காலங்களில் வருவாய்த் துறை பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடக் கோரியும் செவ்வாய்க்கிழமை மதியம் கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மையத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறையினா் 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், சங்கத்தின் மத்திய செயற்குழு உறப்பினா் அ.ராணி, கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சரவணன், கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் செங்கமலை உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.