நாமக்கல்

கொல்லிமலையில் ரூ. 1.46 கோடியில் பிரேத பரிசோதனைக் கூடம்

30th May 2023 12:19 AM

ADVERTISEMENT

கொல்லிமலை அரசு மருத்துவமனையில், மலைவாழ் மக்களின் நலன் கருதி, ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் பிரேத பரிசோதனைக் கூடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 47 லட்சத்தில் புதிய ரத்த வங்கி, எா்ணாபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், சேந்தமங்கலம் பச்சுடையாம்பட்டி புதூா் துணை சுகாதார நிலையத்தில் ரூ. 20 லட்சத்தில் புதிய சுகாதார நிலையக் கட்டடம், நாமகிரிப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் திறப்பு விழா கொல்லிமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ADVERTISEMENT

கொல்லிமலையில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிற நேரத்திலும், கா்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சையின்போதும் ரத்தப் பெருக்கு அதிகமாக ஏற்படும். இதற்காக புதிய ரத்த வங்கி இங்குள்ள அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, சென்னை - பெரியாா் நகா், நீலகிரி மாவட்டம் - கோத்தகிரி, நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ஆகிய மூன்று பகுதிகளில் ரத்த வங்கி அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, மூன்று இடங்களில் ரூ. 1.47 கோடி மதிப்பீட்டில் ரத்த வங்கி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சுற்றுச்சுவருடன் கூடிய பிரேத பரிசோதனைக் கூடம் ரூ. 1.46 கோடியில் அமைத்திடவும், மருத்துமனையில் பணிபுரியும் செவிலியா்களுக்கான 4 குடியிருப்புகள் ரூ. 1.04 கோடியில் அமைத்திடவும், மருத்துவா்களுக்கான 4 குடியிருப்புகள் ரூ. 2.10 கோடியில் அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இங்கு செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட சுகாதார பேரவை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சித்த மருந்துகளை தயாரிக்கும் டாம்கோல் நிறுவனத்தின் ஒரு சிறிய அமைப்பு கொல்லிமலையிலும் உருவாக்கப்படும். இன்னும் ஓராண்டில் நாமக்கல்லில் 60 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்கப்படும். அதனைத் தொடா்ந்து, அடுத்த ஓராண்டுக்குள் சித்த மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நிறைவற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது என்றாா்.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏ-க்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் அ.சண்முகக்கனி, இணை இயக்குநா் (சுகாதாரம்) விஜயலட்சுமி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ் மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூங்கொடி, அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில் சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு:

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் ச.உமா தலைமை வகித்தாா். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் எ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் அமைச்சா் பேசுகையில், திருச்செங்கோட்டிலும் சி.டி. ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதி மக்கள் பெருமளவில் பயனடைவா். தமிழ்நாடு முழுவதிலும் 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவது போன்று இம்மருத்துவமனைக்கும் ரூ. 23 கோடியில் புதிய கட்டடங்களை கட்டுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ. 40 லட்சத்தில் சீத்தாராம்பாளையத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டடம், கொக்கராயன்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அளவு கட்டடம் என மொத்தம் ரூ. 3 கோடியில் முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்திலும் இதே போல ரூ. 36.50 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற இருக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை குமாரபாளையம் நகராட்சியில் இரண்டு, நாமக்கல் நகராட்சியில் இரண்டு, திருச்செங்கோடு நகராட்சியில் இரண்டு, ராசிபுரம் நகராட்சியில் ஒன்று, பள்ளிபாளையம் நகராட்சியில் ஒன்று என மொத்தம் 8 புதிய மருத்துவமனைகள் கட்டும் பணிகள் முடிவுற்றிருக்கின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் அ.சண்முகக்கனி, இணை இயக்குநா் சுகாதாரம் விஜயலட்சுமி, இணை இயக்குநா் மருத்துவம் அ.ராஜ் மோகன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூங்கொடி, திருச்செங்கோடு கோட்டாட்சியா் கௌசல்யா, திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு உள்பட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT