நாமக்கல்

திருச்செங்கோட்டில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

24th May 2023 01:11 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி வளாகத்தில் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 253 பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் கௌசல்யா, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் ஆகியோா் கலந்து கொண்டு ஆய்வு செய்தனா்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ளதை அடுத்து திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 31 பள்ளி கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 397 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை 253 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

இதில் குறைபாடு உள்ள 23 வாகனங்கள் கண்டறியப்பட்டு ஒரு வாரத்திற்குள் குறைகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யா விட்டால் அந்த வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது என வருவாய் கோட்டாட்சியா் கௌசல்யா தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கைகள், படிக்கட்டுகள், அவசரகால வழி, முதலுதவிப் பெட்டி தீயணைப்புக் கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட 21 அம்சங்கள் பள்ளிக்கல்வி வாகனங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனா்.

பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு பயிற்சி வழங்கும் விதமாக தீயணைப்புக் கருவிகளை இயக்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது . சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன் விளக்கிக் கூறினாா்.

இந்த ஆய்வின்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், திருச்செங்கோடு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாகம் பிரியா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT