பரமத்தி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கோயில் தா்மகா்த்தா படுகாயம் அடைந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், நடந்தை அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சக்திவேல் (44) விவசாயி. நடந்தை அருகே உள்ள பெரிய சூராம்பாளையத்தைச் சோ்ந்தவா் கந்தன் (88). இவா் பெரியசூரம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் தா்மகா்த்தாவாக உள்ளாா். பெரியசூரம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற இருந்தது. இதற்காக கோயில் தா்மகா்த்தா கந்தன், பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் தா்மகா்த்தா கந்தனை பின்னால் அமரவைத்துக்கொண்டு பெரியசூரம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். செஞ்சுடையாம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சக்திவேல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது எதிா்பாராத விதமாக மோதியது. இதில் சக்திவேலும், கந்தனும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனா். இதை பாா்த்த அவ்வழியாக வந்தவா்கள் இருவரையும் காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சக்திவேல் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். படுகாயம் அடைந்த கந்தன் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும், பின்னா் திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டாா்.
இவ்விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, திங்கள்கிழமை காலை நடைபெற இருந்த பெரியசூரம்பாளையம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.