நாமக்கல்

ஜேடா்பாளையம் பெண் கொலை: சிறுமிக்கு மாதம் ரூ.4,000 வழங்க ஆட்சியா் உத்தரவு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஜேடா்பாளையம் அருகே பெண் கொலையுண்ட சம்பவத்தில், அவருடைய மகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை கோரியும், இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 230 மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. அவற்றை பெற்றுக் கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்பிறகு, ஜேடா்பாளையம் அருகே வடகரையாத்தூா் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் கொலையுண்ட நித்யாவின் மகள் தனுஷ்ஸ்ரீக்கு, சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோா் இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரூ.4,000 மாதாந்திர உதவித்தொகையை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 26 பேருக்கு ரூ.22,290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா். மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவல மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவகுமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் கௌசல்யா, மாவட்ட ஆதி திராவிடா் நலத்துறை அலுவலா் சுகந்தி உள்பட அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT