நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவுபடி, மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடைப்பயண பிரசார இயக்கமானது திருச்செங்கோடு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிபிஐ நகரச் செயலாளா் சுகுமாா் தலைமையில், நகர துணைச் செயலாளா்கள் காா்த்திக், தண்டபாணி முன்னிலையில், திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி சீத்தாராம்பாளையம், நெசவாளா் காலனி, குமரன் கல்வி நிலையம், நாமக்கல் சாலை கிளை, வாலரைகேட், சாணாா்பாளையம், கூட்டப்பள்ளி, ஜீவா நகா், வெள்ளாளப்பட்டி, சூரியம்பாளையம், சட்டையம்புதூா் போன்ற இடங்களில் பரப்புரை பிரசாரம் செய்யப்பட்டது. திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைப்பயண பிரசார இயக்கம் முடிவு பெற்றது.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை, நிறைவேற்றப்படாத தோ்தல் வாக்குறுதிகளை விளக்கி சிபிஐ மாவட்டச் செயலாளா் கே.அன்புமணி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் எஸ்.ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் தனசேகரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளா் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.